கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்கள் :
கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின்
பதில்கள் :
0.01 )
ஒரு படைப்பாளிக்கு வாழ்வு
குறித்து எத்தனை தேடல் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.
அவன் பதில்களை அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட கண்டடையலாம்.
ஆனால் ஒரு போதும் அவன் அறுதியான முடிவுகளுக்கு- அதன் பிறகு அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல வரமுடியாதவனாக இருக்க வேண்டும்.
ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா?
ஒரு விதையை நீங்கள் கண்டெடுக்கிறீர்கள்
நீங்கள் இதுவரை தேடிக் கொண்டிருந்தது அதுவே என உறுதி கொள்கிறீர்கள் நல்ல நிலம் பார்த்து
விதைத்து நீரூற்றி வளர்க்கிறீர்கள் செடி மரமாகி கிளபரப்பி பூத்து குலுங்கி காய்த்து
மறுபடியும் விதைகளையே தருகிறது வாழ்விலும் படைப்பிலும் இதுவே நிகழ்கிறது ஒரு தேடுதல்
பல தேடுதலைகளை கண்டெடுத்து அது ஒரு போதும் முற்று பெறுவதில்லை பிரக்ஞாபூர்வமான வாழ்விலும்
படைப்பிலும் இதுவே நிகழ்கிறது
0.02 )
வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான்
என்பதுதான் அவனை ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக ஆக்குகிறது. அது மனிதர்களின் பொதுப்படையான பார்வையிலிருந்து உருவாகி வருவதல்ல. அவனுடைய சொந்த அணுகுமுறையிலிருந்து சொந்த பார்வையிலிருந்து உருவாகி வருவது.
ஒரு படைப்பாக்கத்தில் இது என்ன மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது
?
ஒரு மனிதன் ( அல்லது ஒரு உயிர் ) தனக்கு கிடைத்த வாழ்வோடு மண்டையை
மோதி உடைத்துக் கொள்கிறான் உதிரம் கசிகிறது காயம் வலிக்கிறது
ஆறின காயமோ ஆறாத காயமோ
அந்த காயங்களே படைப்புக்கு ஆதாரமாக அமைகிறது தன்னுடைய காயங்களிருந்துதான் அவன் இயங்குகிறான்
காயங்களை உணரும் விதத்தில்தான்
சிறந்த அல்லது ஆகச் சிறந்த படைப்பாளியாக மாற்றம் கொள்கிறான்.
ஆனால் ஏதோ ஒரு நற்கணத்தில்
பிரபஞ்சத்தின் பேரன்பின் உதவியால் மற்றவர் காயங்களுக்கும் தன் காயங்களுக்கும் பேதமற்று
போகிறான்.
ஓரு நல்ல வாசிப்பு தளத்திலும் இந்த அற்புதமே நிகழ்கிறது
0.03 )
மனித உறவுகளுக்கென்று நடைமுறை
வாழ்வு சார்ந்த, எதார்த்த வாழ்வு சார்ந்த ஒரு வேல்யூ இருக்கிறது.
இவை மறைத்து நிற்கும் எத்தனை பொய்மைகளுக்கிடையிலும் உண்மையை காணும் திறன்
ஒரு படைப்பாளிக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு கட்டாயமான தேவையாக இருக்க வேண்டும்.
அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தால் அது அவன் அறிந்து நிகழ்வதை விட சிறப்பானது.
இதை எப்படிப்பட்ட கூற்றாக பார்க்கிறீர்கள் ? இது
ஒரு படைப்பாளிக்கு தவிர்க்க முடியாத முக்கியமானதொரு தேவையென சொல்ல முடியுமா
? இதனால் அவனுக்கு அகமும் புறமும் போராட்டங்கள் ஏற்படலாம்?
உண்மை சுடும் உண்மை ஒளி
மிக்கது கண்களே கூசலாம் தொடர் முயற்சியில் பொய்மை கரைந்து போகும்
உண்மையோடு தொடர்பு அறிந்துதான்
நிகழ்கிறது அறியாமல் நிகழ்ந்தால் அது எப்போதாவது நிகழும் வினோதம் அகமும் புறமும் முட்டிக்
கொள்வதில் மனத் தடுமாற்றம் புத்தி பேதலிப்பு வரையிலும் நிகழ வாய்ப்பிருக்கிறது
படைப்பு என்றால் சும்மாவா
0.04 )
ஒரு படைப்பாளிக்கு தேடல்
என்பது என்ன ? அது ஒரு ஆன்மீக தேடலாக இருக்க முடியாது.
தத்துவ தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான
வழிமுறையோடு இருப்பவை. ஒரு இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும்
எப்படி ஒரு வேறுபட்ட தேடலை கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு
தேடல் என்பது கட்டாயமானதா ?
ஒன்றை தொலைத்து விடுகிறீர்கள்
அல்லது ஒன்றை இழந்து விடுகிறீர்கள் ( தொலைத்தலுக்கும்
இழத்தலுக்கும் வித்தியாசங்கள் உண்டு ) பதட்டம் கொள்கிறீர்கள்
மனக் கொந்தளிப்பு மற்றும் அவமான உணர்வு சூழ்கிறது
தேடல் இங்கு தவிப்புடன்
துவங்குகிறது அர்த்தமற்றதாக மாறிவிட்டது வாழ்வு , தொலைத்தலையும்
இழத்தலையும் உணர்ந்தபோது அல்லது உணரும் ஒவ்வொரு நொடியிலும். அவைகளை
தேடமுனைந்த போது காலம் கழிந்து ஏன் எப்படி என்ற மைல்கற்களையும் தாண்டி தொலைந்ததும்
இழந்ததும் கிடைக்கலாம் இனி எப்போதும் இல்லை என்றும் ஆகலாம். ஆனால்
அவைகள் வெறும் பதில்களே படைப்பாளி தேடுகிறான்
தேடுகிறான்.
ஆன்மிகத் தேடல் தனிமனித பிரயாணம் . முடிவு என்ற ஒன்று நிகழ்ந்த போதும் முடிவற்ற ஒன்றில் அமைதி கொள்ளமுடியும் பரவசம் கொள்ள
முடியும் என்கிறது
தத்துவத் தேடல் அப்படியல்ல ஒரு குழுவிற்கு ஒரு கூட்டத்திற்கு பதில் சொல்ல
வழி சொல்ல பிரச்சனகளின் தன்மைகளை புரிய வைக்க யத்தனிக்கிறது
0.05 )
ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில்
வேரூன்றியிருந்து படைப்பாக்கத்தின் போது இடைவிடாமல் ஆன்மீகத்தளத்திற்கு எத்தனிப்பவன்
என்று சொல்லலாமா ? லௌகீக தளத்திற்கும் ஆன்மீகத் தளத்திற்கும்
இடையே போராடுபவனை போல ஆன்மீகத் தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உன்னதமாகவும் இருக்கலாம்
?
இடையில் ஒரு தீராநதி ஒடுகிறது. நதிக்கு அந்தப் பக்கம் உள்ள பச்சைப் பசேல் நம்மை ஈர்க்கிறது நதியை தாண்ட உன்னாலெல்லாம்
சாத்தியமில்லையென சதா சீண்டுகிறது. ஆனால் தீரா நதி ஒரு பாவனை
0.06 )
எழுதப்போகும் ஒரு படைப்பைப்பற்றி
முன்னரே தெளிவான நிறைவான திட்டமிடலை கொண்ட வரைபடத்தோடு ஒரு படைப்பாளி இருக்கும்போது
அப்படைப்பின் எல்லைகளும் சாத்தியங்களும் குறுகிறதா ? ஒரு படைப்பாக்கத்தின்போது
அவனை ஒரு முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக நிகழும் புத்தம்புதிய மொழிவழிப் பயணத்திற்கு
எது ஆட்படுத்துகிறதோ அதுதான் படைபாற்றல் என்பதா ?
இங்கேதான் நான் அசோகமித்திரனின் ‘ ஒற்றன் “ சிறுகதையை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் ஒரு சுற்றுலா
பயணிக்கும் ஒரு யாத்திரிகனுக்கும் வித்தியாசங்கள் உண்டு ஒரு சுற்றுலா பயணி ஒரு இடத்தை
தேர்ந்தெடுத்து புறப்படும் நேரம் தங்குமிடம் உணவகம் உலாவரும் நேரம் திரும்பி வரும்
நேரம் போகவர தேர்ந்தெடுக்கும் சாலைவழி அல்லது தண்டவாளங்கள் எல்லாவற்றையும் பாதுகாப்பு
உணர்வோடு தீர்மானிக்கிறான். மேலும் அவன் எப்போதும் அச்சத்தோடு
வாழ்கிறான்
ஆனால் யாத்திரீகன் அப்படியல்ல
திசைகள் அவனை விரும்புகிறது
0.07 )
ஏன் மனிதனுக்கு பிறரது
என்ணங்களின் வழியாக மொழியின் வழியாக பின் தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையோ புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.? பிறரது
எழுத்தை கண்டு பிரமிப்பவனின் எழுத்தை கண்டு, அதே பிறர் கண்டு பிரமிப்பதுபோல மனப்பாடம்
செய்து தக்க வைப்பது கடினம். புரிந்து படித்தால் தக்க வைப்பது
எளிது என்பது போல அங்கு என்ன செயல்படுகிறது ? படைப்பாக்க சுதந்திரம்
என்பது என்ன ?
கூர் கவனம் செயல் பட்டால்
கடினமானதையும் புரிந்து கொள்ளலாம் ஆனால் மனம் ஒத்துழைக்க வேண்டும் மனமோ விருப்பு வெறுப்பு
சார்ந்தது
படைப்பாக்க சுதந்திரம்
எல்லையற்றது. நீங்கள் எப்படி எப்படி நடத்தப் பட விரும்புகிறீர்களோ
அப்படியே மற்றவர்களையும் நடத்த வேண்டும் எழுத்திலும்
0.08 )
ஒரு இலக்கிய படைப்பை அப்படைப்பிற்கு
வெளியேயிருந்து அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய படைப்பின் மதிப்பு வாய்ந்த பொடுட்படுத்தக்தக்க
கூறு என்ன ? ஏதோ ஒன்றை காட்டி இலக்கியத்தின் பக்கமாக ஒருவனை
திருப்ப முடியுமானால் அது என்னவாக இருக்க முடியும் ? திரும்பவில்லையெனில்
அதை ஒரு இழப்பு என்று எப்படி கூறுவது ? அதை வெறும் ஆர்வத்தின்
கைகளில் ஒப்படைத்து விடலாமா ?
பொருட்படுத்தக்க கூறாக எப்போதும் மொழி ஆளுமை மற்றும் கற்பனை வளத்தையே
சொல்வேன். ஒரு சக இதயத்தை அல்லது தன்னையே பார்க்க முடியும் என்பதை
சொல்லிச்சொல்லி இலக்கியம் பக்கம் திருப்பமுடியுமென நம்புகிறேன்
திரும்பவில்லையெனில் அது இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் இழப்புதான்
0.09 )
படைப்பாக்கத்தில் கவிதைக்கும்
கதைக்கும் நாவலுக்குமான தனியாக பிரித்தறிந்து பார்க்கக்கூடிய வேறுபாடு என்ன ? கவிஞனின் மனம் பிரத்தியேகமான முறயில் செயல்படுகிறதா ? ஒரு கதையையோ நாவலையோ விமர்சிக்க அணுகுவதை போல ஒரு கவிதையை அணுகுவது கடினமாக
இருப்பது எதனால் ? அங்கு தர்க்கங்களுக்கான சாத்தியங்கள் குறைகிறதா
?
இருக்கிறது. மிகமிக கூர்மை, மிகக் கூர்மை, கூர்மை
என்றே சொல்வேன்
ஒரு கவிஞன் கவித்துவத்தை
முன் உணர்வாக உணர்ந்து அதன் இதழ்கள் விரிக்குமுன்பே கைபற்றுகிறான் அவனது கைச்சூட்டில்
அல்லது இதய நெகிழ்சியில் இதழ்கள் விரிந்து கொள்கிறது நீங்கள் ஒரு பாறை போல நெருடலாகன்றி
நீர் போல முனைகளற்றும் குத்துப் பரப்புகளும் இன்றியும் இருந்தால் போதும்
கவிதையை அணுகலாம் தர்க்கத்தை அறிவுதான் தேடுகிறது
மனம் தேடவில்லை
0.10 )
படைப்பாற்றல் / கற்பனை வளம் /மொழியின் புலமை மற்றும் மொழியை கையாளும்
விதம் / வேறுபட்ட பரந்துபட்ட வாழ்பனுபவங்கள் / இடைவிடாத இலக்கிய அறிமுகம் மற்றும் இலக்கிய வாசிப்பு / நடுநிலை மற்றும் தர்க்க அறிவு /
சொந்த பண்பாட்டு கலாச்சாரத்தில் வேரூன்றி இருத்தல்/ சுய தேடல், கேள்விகள், உரையாடல்,
அவதானிக்கும் திறன், ஞாபகத்திறன்/ ஆன்மீக அறிவு / மன ஆரோக்கியம் இவற்றில் அதன் வேறுபட்ட
முக்கியத்துவம் அடிப்படையில் வரிசைப்படுத்த சொன்னால் எப்படி வரிசைப்படுத்துவீர்கள்
? நீக்க வேண்டியதும் சேர்க்க வேண்டியதும் என்ன ?
படைப்பாற்றல், கற்பனைத் திறன், மொழியை கையாளும் விதம் இவைகள் போதுமென
நினைக்கிறேன். இவைகளில்லாமல் படைப்பு இல்லை
நீங்கள் குறிப்பிடும் மற்றயவைகள் தானாகவே நாளாக நாளாக வந்து ஒட்டிக் கொள்ளும்
மேலும் படைப்புக்கு ஆன்மீக அறிவு தேவையா இல்லையா என்றும் நான் யோசித்தது இல்லை
அப்புறம் மன ஆரோக்கியம்
பற்றியும் சொல்கிறீர்கள்.
படைப்பின் கணம் என்பது ஒருவிதமான பித்து அல்லது உன்மத்த நிலை அந் நிலைகளையும் மன ஆரோக்கியத்தையும் எப்படி ஒரு சேர பார்ப்பது அது இருந்தால் இது இல்லை இது இருந்தால் அது இல்லை
0.11 )
ஒரு படைப்பாளியையும், படைபாற்றலையும் தற்செயலான சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் முடிவு செய்கிறதா
? அல்லது படைப்பாளியும் படைப்பாற்றலும் கடவுளின் அருளைப்போல வருகின்றனவா
? சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் என்றால்- சகல
வசதி வாய்ப்புகளும் அளிக்கப்படுமானால் – யார் வேண்டுமானால் படைப்பாற்றலை
வளர்த்துக் கொள்ள முடியுமா ? கடவுளின் அருள் என்றால் அந்த அருள்
என்றால் தவறவிடப்படுவதற்கான
வாய்ப்பு இருக்கிறதா ? அதாவது அந்த அருள் இருந்து ஒருவன் படைப்பாளியாக பரிமளிக்க முடியாமல் போக முடியுமா
? அல்லது எவரெல்லாம் படைப்பாளியோ அவருக்கு அது இருக்கிறது எனக் கொள்ளலாமா
?
அதுதான் அளவுகோல் என்பது போல
தீர்மானமாக இருந்தால் யார்
வேண்டுமானாலும் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் கடவுள் அருள் அது இது என்று பலஹீனம் கொள்ள வேண்டாம்
0.12)
படைப்புக்கள் என்று வந்துவிட்டால்
சிலவற்றை நிராகரிக்க வேண்டும் சிலவற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும் சிலவற்றை கொண்டாட வேண்டும்
சிலவற்றை குப்பை என ஒதுக்க வேண்டும் சிலவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் சிலவற்றை அவற்றின்
இடத்தை ஒன்றன் பின் ஒன்றாக- உறுதி செய்ய வேண்டும். எதற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பது எதற்கு இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது
என்பது போல. இதை அந்தரங்கமாக நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? அல்லது இது
ஒரு சிக்கலுக்குரியதும் பிரச்சனைகுரியதும் என விட்டு விடலாமா
நான் கவிஞன் அதன் பொருட்டு “ படைப்புகள் ” என்ற பதத்தை நான் என் வசதிக்காக
”கவிதைகள்“ என்று எடுத்துக் கொள்கிறேன் என் அந்தரங்கம்
இதுதான், இவ்வளவுதான். ஒரு கவிதை நாலு வரிகளோ
பதிநாலு வரிகளோ நாற்பது வரிகளோ கவிதையில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் எனக்கு
முக்கியம் நான் என் உணர்வில் துல்லியமாக உணர்வதை சொற்சிக்கனம் கச்சிதம் மொழித் தேர்வு வடிவம் வழியாக
எளிய வார்த்தைகளில் மிகச் சிக்கலான ஒரு சித்திரத்தை தீற்றவே முயலுகிறேன்
0.13)
மக்கள் தொகையோடு ஒப்பிடும்
போது வாசகப் பரப்பு மிகக் குறைவாக இருக்கக் காரணம் என்ன ? படைப்பிலக்கியங்களின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதற்கான ஊடக வழி சாத்தியங்கள்
குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணமா ? அல்லது வாழ்வின் முன் படைப்பிலக்கியம்
அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து விடுகிறதா ?
அல்லது பெரும்பான்மையான
மனிதர்கள் இலக்கியத்தை நிராகரிக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா ? அது ஒரு சொகுசு, மேல் தட்டு அசாதாரணம் என்பது போல
வாசகப் பரப்பு இங்கு மட்டுமல்ல
சர்வ தேச அளவிலேயே நிலமை இதுதான் காட்சி
ஊடகங்களும் பெரிய எதிரி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அதிகாரங்களின்
கீழே
அதிகாரத்திற்கு படைப்பிலக்கியம் குறித்து வெளிக்காட்டாத அச்சம் உண்டு
அதிகாரத்திற்கு படைப்பிலக்கியம் குறித்து வெளிக்காட்டாத அச்சம் உண்டு
படைப்பாளிகள்தான் தங்கள்
தங்கள் இடத்தில் படைப்புகளை இயன்ற வழிகளிலெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் படைப்புக்களுக்கு
முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்
0.14
)
ஒரு இலக்கிய படைப்பில்
புரியாமை,
பூடகம், மர்மம் சிக்கலான சேர்க்கை போன்றவை தவிர்க்க
முடியாதவையா ? அது ஒரு வேளை வாழ்வின் பூடகத்திலிருந்து வருவதா
? அல்லது எதிர் மறையான கூறுகள் அவற்றில் இடம் பெறுகிறதா ?
வாழ்வே இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் இலக்கியம் சொல்கிறது ஞாபகப் படுத்துகிறது. அதனால்தான் இலக்கியம் நமது நன்றிக்குரியதாக வெகுகாலமாக இருந்து வருகிறது இருந்தும்
வரும்
0.15
)
எழுத்தாளர்களில் பலரையும், வரலாறையும் பார்க்கும் பொழுது இயல்பான வழக்கமான வாழ்வின் துயர சாத்தியங்களிலிருந்து
அவன் ஒரு எழுத்தாளனாக இருப்பதாலையே அதை விட அதிகமான குறிப்பான துயர் மிகுந்த வாழ்வை
அடைகிறானா ? அது அவனது சொந்த தனிப்பட்ட இயல்பூக்களிலிருந்து முளைத்தெழுகிறதா
? அல்லது சமூகம் அவனை தன்னிலிருந்து வேறுபட்ட - பிரச்சனைக்குரிய அல்லது ஒவ்வாமை போல - ஒரு மனிதனாக காண்கிறதா ? அவனிடம் உள்ள பிரச்சனை என்ன ? அல்லது சமூகத்திற்கு அவனிடம்
உள்ள பிரச்சனை என்ன ?
எழுதுவதற்கு ஒரு கருவை
அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மறுபடியும் மறுபடியும் அதிலேயே உழல்கிறார்கள் துயரம் மிகுந்து
துயரமாகவே மாறிப்போகிறார்கள். அவன் மீது கொண்ட கவனம் காரணமாக
நாம் உள் நுழைகிறோம் அல்லது மறுத்து விடுகிறோம்
எல்லாம் இயல்பாக நடந்திருக்க
வேண்டும்.
வலிந்து செய்யப்போய் தனக்குத் தானே பிரச்சனை
தன் துயரனினும் துயரின்
எல்லா மடிப்புக்களில் உள்ள ஒரு அநேகமான ஒரு பொதுத்தன்மையை தொட்டிருக்கலாம்
தொடாதபோதுதான் தன்னிலுருந்தும்
சமூகத்திலிருந்தும் நகர்த்தப்பட்ட நிர்பந்தம்
0.16
)
ஒரு படைப்பாளி தன் சொந்த
வாழ்வின் நிஜமான வாழ்பனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்பை உருவாக்கும் போதே, அப்படைப்பு படைப்புக்குரிய அழுத்தமான கூறுகளோடு வெளிப்பட முடியும்.
அவனுக்கு வேறு வழியில்லை அவன் பலவற்றையும் கண்டிருக்கலாம் புரிந்திருக்கலாம்.
அது ஒருவரை அவரது அனுமதியில்லாமல் புகைப்படமெடுப்பது போலாகுமா
? – ஒரு படைப்பு அச்சு அசலாக நிஜம் செய்திதாளிலிருந்து போல வெளிப்படுவதில்லை
என்ற போதிலும் அல்லது ஒரு வாசகனோ ஒரு பார்வையாளனோ ஒரு படைப்பின் மேன்மையான கூறுகள்
கருத்தில் கொள்வதற்கு முன் அது ஒன்றுமேயில்லையா ?
ஒரு படைப்பு தன் பார்வையிலிருந்து
தன் வாழ்பவனுபவத்திலிருந்து எழுதப்பட்டாலும் பொதுத்தன்மையை கண்டு கொள்ளாத பட்சத்தில் ” அனுமதியில்லாத புகைப்படம்
” என்ற பிரச்சனை உண்டுதான்
0.17
)
கலையின் அசாத்தியமான சாத்தியங்களை
கொண்டு பார்வையாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சினிமாதான் அதிகபட்ச சாத்தியங்களை – என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும்- கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நீங்கள் பிற கலைகளோடு
இலக்கியத்தை எவ்வாறு ஒப்பிடுவீர்கள் ? ஒவியம், சிற்பம், சினிமா, நாடகம்,
பாரப்பரிய இசை, நடனம் இவற்றை அவை செயல்படும் முறையில்
இலக்கியத்தோடு ஒப்பிட்டு கூற முடியுமா ? அல்லது இந்த ஒப்பிடுதல்
உபயோகமற்றதா பொருத்தமற்றதா ?
ஒவ்வொரு கலைப்பிரிவுகளும்
தனித்தனி சிறப்பு கொண்டது இவைகளில் ஒப்பீடு எனக்கு தயக்கத்தையே தருகிறது
கலைப்பிரிவு திரைப்படங்களுக்கு
நான் ஒரு நல்ல பார்வையாளன்தான் எந்த இசையும் ( அதன் இலக்கணங்களில் எனக்கு ஆர்வமில்லை
) எனது ஆர்வமே
0.18
)
படைப்பாளிகள் தங்களுக்குள்
அறிந்தோ அறியாமலோ பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு இருக்கிறார்களா ? ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதல்ல. ஒருவரையொருவர்
நெருங்க முடியாதவாறு அல்லது ஒரு பகுதி இன்னொரு பகுதியை நெருங்க முடியாதவாறு இடையில்
குறிக்கிட்டும் நிறுத்தும் கூறுகள் ஏதேனும் இருக்கிறதா ?
ஜாதி என்பது இந்தியாவின்
அவமானம் என்பது போல குழு மனப்பான்மையில் படைப்பாளிகள்
அங்கீகாரமும் விருதுகளும்
விருதுகளுக்கான முயற்சிகளும் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது
0.19
)
சிறுபத்திரிக்கைகளின் செயல்பாடு
தங்களுக்கு திருப்திகரமானதாக இருக்கிறதா ? பல்வேறு தரத்தில்
பல்வேறு வகையில் பல்வேறு பொருளில் எழுத்துக்கள் ஒரு சிறு பத்திரிக்கையை நோக்கி வருகிறது.
30 நாட்களுக்கு ஒரு முறை வெளியாகும் ஏறக்குறைய 80 பக்க ஒரு சிறு பத்திரிக்கையில் என்ன அடிப்படையில் எழுத்தாளர்களை தேர்வுசெய்து
முன்னிறுத்துவது ? சந்தேகமில்லாமல் அது ஆசிரியரின் தனிப்பட்ட
உரிமை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை வாங்கிப்படிக்கும் வாசகன்
என்ற முறையில் அவனது எதிர்ப்பார்ப்புகளை எப்படி வைத்துக் கொள்வது ?
சிறு பத்திரிக்கையின் செயல்பாடு
எந்த சிறு பத்திரிக்கையாக இருந்தாலும் எனக்குப் பிடித்தமானது
அவைகளின் ஆயுட்காலம் அநேகமாக
குறைவானது அவர்களின் இலக்கிய நேர்மை குறைவுபட்டதல்ல
அதிலிருந்துதான் அவர்கள்
எழுத்தாளர்களை ( அதைவிடவும் எழுத்துக்களை என்று சொல்லுவதுதான்
சரி ) தேர்ந்தெடுக்கிறார்கள்
வாசகனும் அதைப் புரிந்து
கொண்டால் போதும்
0.20
)
இணையத்தில் தீவிர படைப்பாளிகளிக்கான
சிறு பத்திரிக்கைகள் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன ? அவை முழுமையான படைப்பாளிகளால்- தளங்களோடு தொடர்ந்து தொடர்பில்
இருப்பது படைப்புகளை வாசிப்பது, படைப்பது, அனுப்புவது பயன்படுத்தப்படுகின்றனவா ? அல்லது அவை தனிப்பட்ட
நபர்களின் ஆத்மதிருப்திக்காக நடத்தப்படுகின்றனவா?
தனிப்பட்டவர்களின் முயற்சியில்தான்
துவங்குறது
இணையத்தில் தீவிர படைப்பாளிகளின்
பங்களிப்பு, ஒத்துழைப்பு ( தொடர்பு,
வாசிப்பது படைப்பை அனுப்புவது கருத்தை பகிர்வது ) குறைவாகத்தான் இருக்கிறது
ஆத்ம திருப்தியோடு முடிவடைய
வாய்ப்பு அதிகம்.
0.21
)
ஒரு படைப்பாளியோ அல்லது
ஒரு வாசகனோ இணையத்தில் சென்று வாசிக்க ஒரு இலக்கிய படைப்பையோ ஒரு இலக்கிய கட்டுரையோ
தொடர்ச்சியாக நுகர வேண்டுமானால் அவனிடம் ஒரு கணினி இருக்க வேண்டும். இணையத் தொடர்பு இருக்க வேண்டும். தேவையானவற்றை எடுத்து
வாசிக்க ஒரு பிரிண்டர் இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லையென்றால்
அவன் பிரவுசிங்சென்டருக்கு கட்டணம் செலுத்தி- குறைந்த நேரம் அதிக
கட்டணம்- அதை சாத்தியமைக்க வேண்டும். பொதுவாக
தீவிர இலக்கிய வாசகர்கள் இணையத்தை எளிதில் அணுகி அதை பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு
பொருளாதார சுதந்திரத்தோடு இருப்பவர்களா ?
இல்லைதான். ஆர்வம் சுதந்திரத்தை தேடித் தரலாம் அல்லது சக இதயங்களோடு கூட்டாக முயற்சிக்கலாம்
0.22
)
ஒரு படைப்பை இணையத்திலிருந்து
பிரிண்ட்வுட்டாக எடுத்து வாசிப்பதற்கும் ஒரு பத்திரிக்கையில் அதை வாசிப்பதற்கும் நிறைய
வேறுபாடு இருப்பதாக கருதுகிறேன் நீங்கள் என்ன நினக்கிறீர்கள் ?
சிறு வயதிலிருந்தே நேரடியாக
வாசித்து பழகி விட்டோம். இந்த பழக்கமாகிப்போன பழக்கம் தவிர மற்றவைகள் காலத்தோடு
மாறிவிடும் வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தும் விடும்
கடலோடி மீன் பிடித்து கொணர்ந்தால்தான்
வாழ்வு என்றால் நீங்கள் மீன் பிடிக்க கிளம்பி விடுவீர்கள் இரைச்சல்மிகு அலையோ ஆழ்கடலோ
ஒர் பொருட்டல்ல
0.23 )
பதிப்பகத்தை ஒரு தொழிலாக
நடத்துவதை தவிர்க்கமுடியாது என்ற நிலையில், பதிப்பகங்கள்
பொதுவாக தீவிர படைப்பிலக்கியத்தை எப்படி பார்க்கின்றன ? படைப்பிலயக்கியத்தோடு
ஏதேனும் ஒரு வகையில் தொடர்போடு இருப்பவர்கள்தான் அதை பதிப்பிக்கிறார்களா ? தீவிர படைபிலக்கியத்தின் விற்பனை பதிப்பாளர்களுக்கு லாபம் தரும் ஒரு தொழிலாக
இருக்கிறதா ?
தொழில் என்பது வியாபாரம்.
பதிப்பகங்கள் தீவிர படைப்பிலக்கியத்தை
தேர்ந்தெடுத்தால் சந்தைப்படுத்த ஆர்வலர்களை அணுக பெருமுயற்சி தேவை அதன் பின்பே லாபம்
போன்றவை
0.24
)
எழுத வேண்டும் என்ற எண்ணம்
முதன்முதலில் ஒரு எழுத்தாளனுக்கு எப்படி வருகிறதா ? எல்லோருக்கும்
பிரச்சனைகள் இருக்கிறது. சூழலும் ஒரே மாதிரியானதே. படைப்பாற்றல் பல்வேறு வழிகளில் வெளிப்படும் சாத்தியங்களும் உள்ளன. எழுத்தின் நுழைவாயில் எப்படிபட்டது? அது மிக இயல்பாகவும்,
தற்செயலாகவும் நிகழ்கிறதா? எழுத்து எல்லோரையும்
வசீகரித்து உள்ளே இழுப்பதில்லை
மனிதம் எப்போதும் தன்னை
பகிர விரும்புகிறது தன்னை பகிர யத்தனிப்பவர்களுக்கு கலை ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நுழைவாயில்களை
திறந்து உள்ளே வாவென அழைக்கிறது
இதன் பொருட்டே இயல்பாக
நுழைவாயிலைக் கடக்கிறோம்.
0.25 )
இலக்கியம்
என்ற பெயரில் எழுதுபவர்களையெல்லாம் மொத்தமாக கணக்கிட்டு வைத்துப்பார்க்கும் பொழுது
அவர்கள் பல்வேறு வகையாக பிரிந்து கிடக்கிறார்கள். சாதாரண,
மலினமான, பொருட்படுத்த முடியாத எழுத்துக்களிலிருந்து
அசாதாரண உன்னதமான நிராகரிக்கவே முடியாத எழுத்துவரை தேடல், கேள்விகள்
பார்வை புரிதல் இவைதான் இந்த வேறுபாட்டை உருவாக்குகிறதா ? எழுத்தில் வேறுபாடுகளை அடையாளம் கண்டு ஏன் சரியான
திசையில் ஒருவரால் நகர முடியாமல் போகிறது ?
நகர கொஞ்சமும்
விரும்பாதவர்களை என்ன செய்ய இயலும் ? எழுத்து உங்கள்
தோள் தொடவேண்டும் உங்கள் இதயம் தொட வேண்டும் இப்படித்தான் அல்லது இப்படியும்தான் யதார்த்தம்
இருக்கிறது என்று சொல்ல தைர்யம் வேண்டும்
0.26 )
எழுத்து
ஒரு வடிகாலா ? அல்லது படைபாற்றல் என்று தனியான ஒன்றிலிருந்து
அது பிறந்து வர வேண்டுமா ? வடிகாலாக இருந்தால்- வெறும் புலம்பல் வெறும் துயரக்காடு போன்று அதில் அதை வாசிக்கும் ஒரு வாசகனின்
இடமென்ன ? அல்லது ஒரே சமயத்தில் அது இரண்டுமாக இருக்கிறதா
?
ஆரம்ப
எழுத்துக்கள் ஒரு வடிகாலாக அமைந்து விடுகிறது. வாசகன் சிறிதே
சிறிதே நின்று கவனிக்கிறான் பின் நகர்ந்து விடுகிறான், ஒரு ஏளன
புன்னகையோடு
பொறுமையும்
தொடர் முயற்சியுமே படைப்பாற்றலை உணர வைத்து மற்றவர் நிலத்திலும் நீர் பாய்ச்சுகிறது
0.27 )
எழுதும்
போது இது யாருக்காக எழுதப்படுகிறது என்ற பிரக்ஞை உள்ளே செயல்படுவது ஒரு படைப்பின் போக்கை
ஒரு படைப்பின் அர்த்தத்தை திசை மாற்றிவிடுமா ?
யாருக்காக
என்பதைவிடவும் யாருக்காகவுமான எழுத்து படைப்பின் போக்கை மேம்படுத்துகிறது, விரிவு படுத்துகிறது
0.28 )
ஒருவர்
தனக்காக எழுதுகிறார். அதை தன்னிடமே வைத்துக் கொள்கிறார்
அல்லது வேண்டுமானால் பிறர் வாசித்துக் கொள்ளட்டும் என்று அனுமதிக்கிறார் இதை நீங்கள்
எப்படி பார்க்கிறீர்கள் ? அதாவது ஒரு எழுத்தில் பிறர் என்ற பாத்திரத்தின்
முக்கியத்துவம் என்ன ?
கண்ணாடி முன் நிற்கும்
போது அதில் தெரியும் நீங்கள் வலம் இடம் மாறித் தெரிகிறீர்கள். “ பிறர் “ அங்கிருந்துதான் துவங்கிறது
“ பிறர்”
உங்களுக்கு தேவை, அத்தியாவசியம்.
தனிமையில்
இருப்பவனாக தன்னை உணர்பவனுக்கு கூட அவன் தனிமையே ” பிறர்”தான்.
இது என்கிற போதே அது இருக்கிறது
அது என்கிறபோதே இது இருக்கிறது இங்கே என்கிற போதே அங்கே இருக்கிறது. தானும் ”பிறரு”ம் நெருங்கிவர இலக்கியம்
முயன்று பார்க்கிறது
0.29 )
சுதந்திரத்தை
வரையறுப்பதாக இருந்தால் ஒரு எழுத்தாளனுக்கு தேவையான சுதந்திரத்தை எப்படி வரையறுப்பீர்கள் ? எல்லையற்ற சுதந்திரத்தை நம்மால் கற்பனை செய்யவோ அதை ஒரு வேண்டுகோளாக முன் வைக்க
முடியாது
எழுத்து
சுதந்திரம் என்பது காலத்திற்கு காலம் பண்பாடுக்கு பண்பாடு நிலத்திற்கு நிலம் மாறுகிறது
வரையறுக்க
தேவையில்லாத எல்லையற்ற சுதந்திரம் நோக்கித்தான் யாரும் நகர்கிறார்கள் நகர்தல் மெதுமெதுவாக
நடக்கிறது
0.30 )
இதுதான்
பிரச்சனை,
இதுதான் வாழ்க்கை, இதுதான் தீர்வு, சுபம் என எழுத்து ஒரு முற்றுப் புள்ளிக்கு வருவது, ஏன்
மிகச் சிறந்த எழுத்தாக கருதப்படுவதில்லை ?
நாம்
உணரும் வாழ்வில் பொதுவாக இது நடப்பதில்லை அதனால் “ “அநேகமான ஒரு பொய்யை “ யாரும் சிலாக்கிப்பதில்லை
0.31 )
நான்
இந்த எழுத்தில் நிகழும் சிக்கல் நிறைந்த முடிவற்ற சேர்க்கைகளை- ஒரு மரத்தின் உத்தேசிக்க முடியாத திசையில் உருவாகும் ஆயிரக்கணக்கான கிளைகள்
போல அல்லது ஒரு சிலந்தி வலையை போல- ஒரு ஆர்வமூட்டும் கூறாக பார்க்கிறேன்.
இதற்கு எழுத்தாளர்களில் யாரையேனும் உதாரணமாக சொல்லி பேசமுடியுமா
?
ஆக்டோபஸைப்
போல எல்லா திசைகளிலும் கவிதையொன்று நகர கவிஞன் பெரு விருப்பம், பேரார்வம் கொள்கிறான்
கவிஞர்
தேவதச்சனின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவரின் இந்த முயற்சியை உணர முடியும் நான் உதாரணமாக
ஒரு கவிதை ஒன்றை சொல்வதைவிட ஒருவர் அவைகளை படித்துணர வேண்டும் என்றே விரும்புகிறேன்
தேவதச்சனின்
மொத்த கவிதை தொகுப்பு ( மர்ம நபர்- தேவதச்சன் கவிதைகள் ) உயிர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்.
எதையும் தன்னில் உணருவது மேன்மை
0.32 )
எழுத்தாள்ர்களில்
கோணங்கி ஒரு வித்தியாசமான கூறுமுறையை கையாள்கிறார் ( அவர்
எழுத்தை நான் எப்போதோ வாசித்தது ) வினாடிக்கு வினாடி நிகழும்
விடுகதையைபோல மர்மத்தை உருவாக்கி கையில் கொடுத்து அதன் சாவியை எடுத்து கண்முன் வீசியெறிந்து
விடுவதை போல பைத்தியக்காரத்தனமான சொற்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக வருவதை
போலவும் அது இல்லை. ஒவ்வொன்றும் உள்ளே ஒரு அர்த்தத்தை சுமந்து
சிரிப்பதை போல சிரிக்கிறது. அதை கட்டமைப்பதில் உள்ள அசாத்தியமும்
கண்ணக்கட்டுகிறது. அந்த எழுத்திற்கு என்ன நடந்திருக்க முடியும்
என நீங்கள் கருதுகிறீர்கள் ?
அவர் முதல் பதினைந்து வருடங்களில்
பின் தொடரக்கூடிய நல்ல நல்ல சிறுகதைகள் உள்பட மற்றவற்றையும் தந்தார்.
பின்பே வித்தியாசமான கூறுமுறைகளை கையாள்கிறார் பின் தொடர இது கடினமாகத்தான் இருகிறது இன்றளவும்.
பின்பே வித்தியாசமான கூறுமுறைகளை கையாள்கிறார் பின் தொடர இது கடினமாகத்தான் இருகிறது இன்றளவும்.
வாசகர்களின்
வாசிப்புத் தரத்தை மேம்படுத்தவும் மாற்றியமைக்கவும் மற்றைய படைப்பாளிகளிடமிருந்து தன்னை
வித்தியாசப்படுத்தவும் இது வழிவகுக்கிறது.
Comments
Post a Comment