நெடு நடனம்
நடராஜம், சிவதாண்டவம், நடராஜ வழிபாடு, பஞ்ச சபைகள், நடன
சபைகள் இவைகளில் எனக்கு பேரார்வம் ஏற்பட இரண்டு காரணிகள்
ஒன்று —
குனித்த புருவமும் கொவ்வை செவ் வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்தசடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே-- என்ற
நாவுக்கரசரின் பாடல் சிறுவயது முதல் தந்த பரவசம்.
இரண்டு —
முப்பதைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்து படிக்க நேர்ந்த ‘ FRITJOF CAPRA“ என்ற இயற்பியல் பேரறிஞரின் உலகப் புகழ் பெற்ற நூல், “ Taoism
of physics “.
இந்த இரண்டு காரணிகளால் நான் நடராஜ தாண்டவம் குறித்து உணர்ந்து
கொள்ள பெரிதும் முனைப்பு எடுத்துக் கொண்டேன்.
0 0 0
சிவன் படிமங்களில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது நடராஜ
திரு உருவம். லிங்கம் அருவமேனி என்றால் நடராஜர் உருவ மேனியாகும் .நடராஜரே
பரதத்தை இவ்வுலக்திற்கு தந்தவர். பண்ணுக்கும் கூத்திற்கும் ஆடவல்லானை
தத்துவ விளக்களோடு பலப்பல படிமங்கள் அமைத்து வழிபடுகிறது சைவம். பரத கலையின் நூற்றியெட்டு பாவனைகளையும் உணர்த்தும் வகையில் நடராஜ படிமத்தில்
நூற்றியெட்டு வகைகளையும் காணமுடியும். மேலும் இயக்கத்தின் வெளிப்பாடகவே
உணர வேண்டியுள்ளது. உடல் இயக்கத்திற்கு இதயத்துடிப்போல இப்பெருஉலக
இயக்கத்திற்கு நடராஜதாண்டவமே அடிப்படை. இறைவன் ஆன்மா உய்யும்
பொருட்டு அவற்றின் பக்குவத்திற்கு ஏற்ப போகம், யோகம்,
வேகம் என்ற மூன்று திருவடிவங்களை ஏற்று ஆன்மாக்களை ஆட்கொள்கிறான்.
இந்த நெடுநடன இயக்கத்திலே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல்
என்ற அய்ந்துவகை தொழில்களை சிவனார் செய்து காட்டுகிறார். இதுவே
சைவம் நமக்கு உண்ர்த்தும் உண்மை.
0 0 0
சிற்ப சாஸ்திர நூல்கள் சிவதாண்டவ மூர்த்தங்களை ஏழாக சொல்கின்றன. ஆனந்த தாண்டவம்,
சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், முனி தாண்டவம், சாஸ்தா தண்டவம் என. சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாகவும் மதுரையில் சந்தியா தாண்டவமாகவும் திருப்பத்தூரில் கௌரி தாண்டவமாகவும் திருக்குற்றாலத்தில் திரிபுர தாண்டவமாகவும் திருவாலங்காட்டில் காளிகா மற்றும் ஊர்த்துவ தாண்டவமாகவும்
திருநெல்வேலியில் முனிதாண்டவமாகவும் அடையாளம் காட்டப்படுகிறன.
நடராஜர் திருநடனம் அய்ந்து சபைகளில் நிகழ்ததாக சைவம் சொல்கிறது. இதில் திருவாலங்காடு இரத்தினசபையாகவும்
இங்கே நடராஜர் இரத்தின
சபாபதியாகவும், தில்லை கனகசபையாகவும் இங்கே நடராஜர் கனகசபாபதியகவும், திருநெல்வேலி தாமிரசபையகவும் இதன் நடராஜர் தாமிர பதியாகவும், மதுரை வெள்ளி சபையாகவும் இதன் சபாபதி இரசத சபாபதியாகவும், திருக்குற்றாலம் சித்திரசபையாகவும் சித்திர சபாபதியாகவும் அடையாளம்காட்டப்பெருகிறது.
சபாபதியாகவும், தில்லை கனகசபையாகவும் இங்கே நடராஜர் கனகசபாபதியகவும், திருநெல்வேலி தாமிரசபையகவும் இதன் நடராஜர் தாமிர பதியாகவும், மதுரை வெள்ளி சபையாகவும் இதன் சபாபதி இரசத சபாபதியாகவும், திருக்குற்றாலம் சித்திரசபையாகவும் சித்திர சபாபதியாகவும் அடையாளம்காட்டப்பெருகிறது.
0 0 0
வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரம்ம விருத்தபுரம், தாருகாவனம் என்றெல்லாம் தலபுராணத்தில் குறிக்கப்பெறும் திருநெல்வேலி தென் இந்தியாவின் தென்பகுதியில் கிழக்கில் உள்ளது. பொருநை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருநெல்வேலியில்தான் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி திருக்கோவில் பதினான்கு நூற்றாண்டுகளுக்குமேல் சிறந்த சைவவழிபாட்டுத்தலமாக விளங்கிவருகிறது.
இந்த நெல்லையப்பர் திருக்கோவில் கருவறையை சுற்றி எழுப்பப்பெற்ற
இரண்டாவது பிரகாரத்தில் மேற்கு மூலையில் தெற்கு நோக்கி இருப்பதுதான் பஞ்சசபைகளில் ஒன்றான தாமிர சபை.
0 0 0
தலபுராணம் சொல்வதுதென்ன என்பதை முதலில் பார்ப்போம். திருநெல்வேலியில் மணவையை
ஆண்ட அரசன் “ முழுதும் கண்ட ராமன் வழுதியர் கோன் “ இவருக்கு பால் தினமும் எடுத்து வருபவராக இருந்தவர், இராமக்கோன். பால் எடுத்து வரும் வழியில் தினமும் தவறாது கல் தடுக்கி பால் சிந்திவர, ஒரு நாள் கோடரி கொண்டு கல்முனையை
நீக்கவும் வெட்டிய இடத்தில் இரத்தம் பீறிட்டுவர அரசனிடம் சென்று முறையிட்டான். உடனே விரைந்த அரசன், இறைவனே தான் தோன்றியாக காட்சியளிப்பதை
அறிந்து அவர் அருளை போற்றி மேலும் வளர்ந்து காட்சியருள வேண்டுகிறான்.
உடனே இறைவனும் தான் இருக்கும் பீடங்கள் ஒவ்வொன்றாய் வளர்த்து இருபத்தியோரு
பீடமாக வளர்ந்தமையால் “ வேண்ட வளர்ந்த மகாலிங்கம் ” என அழைக்கப்பெறுகிறார். இதுவே தலபுராணம். தல விருட்சம் மூங்கில். கோவிலுள்ள மூலமகாலிங்கமே மிகவும்
பழமையான சிவலிங்கம்.
பொருநைக் கரையிலுள்ள திருநெல்வேலி கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தே பிரபலம். தென்பாண்டி நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியிருக்கிறது. தேவாரத்திலும் தனியிடம் பெற்றுள்ளது. கி.பி. பதினேழாம் நூற்றாண்டுவரை வாழையடி வாழையாக அரசோச்சிய குலம் பாண்டியர் குலமே.
நெல்லையப்பர் கோவிலின் தோற்றமும் மற்றய பழங்கோவில்கள் போலவே புதிராகவே
உள்ளது. சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றை வைத்தே இந்த கோவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே உள்ளது எனத் தெரிகிறது.
இங்கு மூல மகாலிங்கமே முதல்ப் பெருமானாக விளங்குகிறார். கோவிலில் பூசை முதலியன மூலமகாலிங்கத்திற்கு செய்த பிறகே நெல்லையப்பருக்கு நடக்கிறது. இதுவே மூலமகாலிங்கத்தின் பழமையை
நிறுவுகிறது. ” நின்ற சீர் நெடுமாறன் அரிகேசரி
மாறவர்மனே ” இந்த கோவிலை
மணிமண்டபம் வரை கட்டி முடித்தான் என்கிறது தல புராணம். இவன் சம்பந்தரால்
சைவம் ஆனவன். 850 அடி நீளமும் 756 அடி அகலமுமாய்
அமைந்த இந்த கோவிலுள் மூன்று திருச்சுற்றுகள் உள்ளது. கோவில் எவ்வாறு
கட்டப்படவேண்டுமோ அதன் விதிகளுக்கு ஏற்ப கட்டப்பட்ட கோவில் இது.
இரண்டாம் திருச்சுற்றில் தெற்குப்பிரகாரத்தில் பொல்லாப்பிள்ளையார்,
சப்த கன்னியர்கள், அறுபத்திமூவர் தாண்டிவருவோமானால்
இறுதியில் அரக்கர் கோமான் இராவணேச்வரர் சோமாஸ்கந்தர் இருக்கும் கையிலாய மலையை தாங்கி பிடித்திருப்பதை பார்க்கலாம். சோமாஸ்கந்தரை
காண இடது பக்கம் படியேறி பார்த்துவிட்டு வலப்பக்கம் வழியாக கீழே இறங்கி வர வேண்டும்.
இறங்கி வரும் வழியில் பாண்டியர் குல இலச்சினையை பொறித்திருக்க காணலாம்.
இரண்டு மீன்கள் கொண்டுள்ள இலச்சினையது. இராவணணைத்
தாண்டி மேற்குப் பிரகாரத்தில் இறுதியில் உள்ளது தாமிர சபை. இது
கோவிலின் வாயுத் திக்கில் அமைந்துள்ளது.
0 0 0
முனிநிருத்தம் என்ற முனிதாண்டவமே தாமிரசபையில் நடராஜரால் நிகழ்த்தப்
பெறுகிறது. இந்தக் கோவிலில் கூத்தபிரானது செப்புத் திருமேனிகள்
மூன்று உள்ளன. ஒன்று முனிநிருத்தம் ஆட தாமிரசபைக்கு எழுந்தருளும்
கூத்தபிரான். இரண்டாவது நெல்லையப்பர் மகாமண்டபத்தில் உள்ளது.
மூன்றாவது காந்திமதி கோவிலில் உள்ள சௌந்திர மண்டபத்தில் அம்பாளுக்காக
ஆடவரும் மூர்த்தியாகும். மூன்று செப்புத்திருமேனிகளுமே கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும்..
0 0 0
பஞ்சராத்ரிக தீபம்,
சக்தி தீபம் என்ற இருவகையில் பாண்டிநாட்டில் சக்தி தீபமே அநுசரிக்கப்படுகிறது.
மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்தூக்குடி, மதுரை வரை பஞ்சவாத்தியங்களுக்கே முக்கியத்துவம்.
மதுரையை தாண்டினால் மேளம் / தவில் முக்கியத்துவம்
பெறுகிறது.
0 0 0
தாமிரசபை ஸ்திரமான கட்டிட அமைப்பில் மேல் நாலுபக்கமும் சாளரங்கள்
உள்ளன. சாளரங்கள்
எண்கோண அமைப்பில் உள்ளன. உள்பக்கம் திருநெல்வேலி திருவிளையாடல்
புராணங்கள் பற்றின சிற்பங்கள் உள்ளன. தாமிரசபையில் தெற்கு நோக்கியும்
வடக்கு நோக்கியும் இரு வாசல்கள் உள்ளன. திருவிழா நேரத்தில் மட்டுமே
வாசல் திறக்கப்படும். மேலே வசீகர தாமிரத்தில் கூரை வேய்ந்திருக்கும்.
ஆன்மீகத்தில் தாமிரத்திற்கென்று சிறப்பான இடம் உண்டு பூசை பாத்திரங்கள்
துவங்கி கோபுர கலசம்வரை.
0 0 0
தாமிரசபையில்
சிறப்பாக இரண்டு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒன்று மார்கழி மாதத்தில் ஆருத்திரா தரிசனம்.
இரண்டாவது ஆனி மாதத்து மாணிக்கவாசகர் அய்க்கியமாதல்.
0 0 0
ஆருத்ரா தரிசனம்
மார்கழி சதய நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன்
விழா துவங்குகிறது. நான்காம் நாளில் இடப வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளுகிறார். ஆறாம் திருநாளில் மனோன்மணி திருக்கல்யாணம். ஒன்பதாம்
நாளில் தேரில் உலா. பத்தாம் நாளன்று தாமிர சபையில் நடராசபெருமானின்
திருநடனம் அதாவது ஆருத்ரா தரிசனம். அன்றே சிந்துபூந்துறையில்
தீர்த்தவாரி நிகழ்கிறது.
இனி ஆருத்ரா தரிசனம் முன்னிரவில்
எப்படி துவங்கி நிகழ்ந்து நிறைவுறுகிறது
என்பதை பார்க்கலாம்.
இரவின்
துவக்கத்தில் விழா துவங்குகிறது.
இரவு முழுவதும் கோவில் திறந்தே இருக்கும். நடை
சாத்துவதில்லை. ஆருத்ரா விழாவிற்காக கொடியெறின நாளிலிருந்தே கோவிலில்
தேவாரம் திருவாசகம் தவிர்த்து திருவெம்பாவை இருபது பாடல்களை திரும்பவும் திரும்பவும்
பாடுகிறார்கள். ஒதுவார்களும் பக்தர்களும் பெண்களும் குழைந்தைகளும் திருவெம்பாவை பாடப் பாட அதை கேட்க கேட்க இனிய பரவசமான அநுபவம்.
மூலமகாலிங்கம் என்ற சால்வாடீஸ்வரரின் சந்நதிக்கு மேல் இடது பக்கத்தில் இருந்த நடராஜ சிவகாமி திருமேனிகளை வெளியே எடுத்து வைத்து பூ
அலங்காரத்தை துவங்குகிறார்கள்.
அலங்காரம் முடிந்தபிறகு நடராஜருக்கு சிவகாமிக்கும் தீபாரதனை காட்டப்பெறுகிறது. தேங்காய்
உடைப்பிற்கு பின்பு மேளதாளத்துடன் சால்வாடீஸ்வரர் முன்பிலிருந்து நடராஜர் பிரியத்திற்குரிய சிவகாமி பிரியத்துடன் பின் தொடர இரண்டாவது திருச்சுற்றுக்காக வெளியே இறங்கி வருகிறார்.
பொல்லப்பிள்ளையார்,
சப்த கன்னியர். அறுபத்து மூவர் என்று நகர்ந்துநகர்ந்து இராவணண் இமையமலையோடு சோமாஸ்கந்தரை சுமந்து நிற்கும் இடம் தாண்டி மேற்குப்
பிரகாரம் நுழைகிறார் பின் எதிரே முடிவில் இருக்கும் தாமிரசபைக்குள் சிவகாமியோடு நுழைகிறார்.
இதற்கிடையில் அறுபத்து மூவரும் தாமிரசபைக்கு எதிரே நடனசபைக்கு
இடது பக்கத்தில் ஆர்வமாய் அணிவகுத்து நிற்கிறார்கள். எதிப்புரத்தில் அகத்திய பெருமான் லோபமுத்திரையுடன்
நடனத்தை எதிர்பார்த்து நிற்க நடனசபையின் எதிர்முனையில் நெல்லையப்பரும் காந்திமதியோடு காட்சி தருகிறார்.
முதலில் கோபூஜை அல்லது பசு தீபாராதனை துவங்குகிறது. கூத்தபிரானின் சந்நதியில் ஒரு பசு அழைத்து வரப்பெறுகிறது. இந்த நிகழ்வு சிவன் படைத்தல்
ஆகிய சிருக்ஷ்டி தொழிலை மேற்கொள்வது ஆன்மாக்கள் பொருட்டே என்பதை உணர்த்துகிறது.
சிவன் சந்நதியை நோக்கி பசு முகம் காட்டாமல் அதன் பின்புறத்தையே காட்டி
நிறுத்தப்பெறுகிறது. இதுவும் ஆன்மா இறைவன் திருவடியை விரும்பாமல்
உலக இன்பத்தையே விரும்பி செல்லும் நிலையையே காட்டுகிறது. பசுவின் முகத்திற்கு
பக்கத்தில் ஒரு நிலைக் கண்ணாடியை ஒருவர் பிடித்து நிற்க தீப ஆராதனை தொடர்கிறது.
பிறகு நடனசபையின் முன்பு திருச்சாந்து ஹோமம் நிகழவும் அபிக்ஷேகமும்
நடக்கிறது. முதலில் தவிலுக்கு / மேளத்திற்க்கு தீபம் காட்டுகிறார்கள்.
( இருப்பினும் பஞ்சவாத்தியமே சிறப்பிற்குரியது தென் மாவட்டங்களில் ). நீர், அரிசி, திரவியம், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனமென அபிக்ஷேகங்கள் அமர்களப்படுகின்றன. திருவெம்பாவையும் தொடர்ந்து பாடப்
பெறுகிறது. எலுமிச்சபழ மாலை உள்பட பூ அலங்காரம் நடராஜர் நடனத்திற்கு தயாராக இருக்கிறது இப்போது
தீப ஆராதனை துவங்குகிறது. ஒவ்வொரு முறையும் விதவிதமான தீபங்களுடன் தீபம் காட்டப்படும் போது எதிரெ உள்ள நெல்லையப்பருக்கும் அதே தீபம் காட்டப்படுகிறது. பின்பு நடனம் துவங்கும் முன்பு காந்திமதி
இது முனிவர்கள் காண பெருமானின் நடனம் என்பதால் நெல்லையப்பரிடமிருந்து நகன்று மக்களோடு மக்களாக அமர்ந்து நடனம் காணத்துவங்குகிறார்.
தீப ஆராதனை
நிறைவுறவும் ஆடவல்லான் எம்பெருமான் பஞ்சவாத்தியங்களின் பெருமுழக்கத்துடன்
நடனசபையில் இறங்குகிறார்.
முனிவர்கள் இருவர் வருகை தருகின்றனர். அவர்கள் எதிரே பதினோரு தடவைகள்
முன்னும் பின்னும் சுழன்று சுழன்று நடராஜரின் திரு நடனம்
நிகழ்கிறது ஒவ்வொரு தடவை முடியும் போது தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து தீப ஆராதனை நிகழ்கிறது கடைசியான மூன்று நடனம் மிகமிக வேகத்துடன் நடந்தேறுகிறது. நடனம் நிறைவுற்றபின் நடராஜர் வெளிப்பிரகாரத்திற்கு ஏகுகிறார். கறுப்பு சாந்தும் திருவாதிரை களியும் பக்தர்களுக்கு வழங்கப் பெறுகிறது.
ஆடவல்லான் வெளிப்பிரகாரம் நோக்கி நகரவும் பக்தர்கள் திரளாகவும் பேரார்வத்துடன் தாமிரசபைக்குள் நுழைகின்றனர். உள்ளே
உள்ள சிற்பங்களை கண்ணகல எதிகொள்கிறார்கள். தாமிரசபையின் ஒரு வாசல்
வழியாக வந்து எதிர் வாசல் வழியாக வெளியேறி சந்தனசபாபதியையும் வணங்கி ஆருத்ரா தரிசனம் பெற்ற மகிழ்வுடன் ஆலயம் நீங்குகின்றனர். நெல்லையப்பரும் காந்திமதியும் பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோவிலுக்குள் விரைகின்றனர்.
மாணிக்கவாசகரின் அய்கியமாதல்
இது ஆனி மாதமகம் அன்று நடைபெறுகிறது. அதே தாமிரசபையின்
இரண்டாவது சுற்றில் மாணிக்கவாசகர் பெருமான் பல்லக்கு ஏற்றி அழைத்து வரப்பெறுகிறார். அவர் பாடிய
பாடல்கள் மறுபடி மறுபடி பாடப் பெறுகிறது மற்றைய நாயன்மார்களை கடந்து சோமாஸ்கந்தரையும்
கடந்து தாமிரசபை நோக்கி வருகிறார் தாமிரசபையில் எதிபார்த்து காத்திருக்கும் நடராஜரோடு இணைந்து கொள்கிறார்.
திரைக்கதவு சாத்தப்பெறுகிறது மாணிக்கவாசகரின் அய்க்கியமாதல் நிறைவுபெறுகிறது.
0 0 0
பிற செய்திகள்
1.திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்கான மற்றையசபைகள்
1) சிந்துபூந்துறை—தீர்த்தசபை
2) சங்கரன்கோவில் மானூர்—ஆச்சர்ய சபை
3) நெல்லை காந்திமதி கோவில்
உள்ள சொந்தர்ய சபை
4) சுவாமி கோவில் இராச சபை.
2.திருநெல்வேலி வடக்கு ராஜவல்லிபுரம் என்ற இடத்தில் “ செப்பரை “
என்ற திருக்கோவில் உள்ளது. செம்புத்தகடால் கூரைவேய்ந்த
அமைதியான ஒரு சிவாலயம். இதுதான் உண்மையான தாமிரசபை என்று சொல்லுபவர்களும் இன்றும் உண்டு.
3.தாமிரசபை செம்பு திருமேனி போல அய்ந்து
திருமேனிகள் உண்டு. அவைகள் ஒரே ஸ்.தபதியால் செய்யப்பட்டவை என்றும்
செப்பரை, கரிசூழ்ந்தமங்கலம்,கட்டாரிமங்கலம்,கருவேலன்குளம் சிதம்பரம் என்ற ஊர்களில் சிவாலயங்களில் இவைகளை காணமுடியும் என்கிறார்கள்.
4.இன்னும் ஒரு சுவையான செய்தி தாமிரசபைக்கு முன் உள்ளபிரகார நடுவில் யாரும் நடந்துசெல்வதில்லை அங்கே நடராஜ தாண்டவம்
எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையால்.மேலும்
அங்கே சித்தர்கள் நடமாட்டமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.
அங்கே சித்தர்கள் நடமாட்டமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.
--------------------------------------------***-----------------------------------------------------
Comments
Post a Comment